தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், உதவி பேராசிரியர் வடிவேல் புவியியல் துறை மாணவர்களிடையே சாதி மத மோதல்களைத் தூண்டும் வகையிலும், பாஜகவிற்கு ஆதரவாகவும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து இழிவாகவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து உதவிப்பேராசிரியர் வடிவேல் மீது, எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து உதவிப்பேராசிரியர் திருச்சி ஈவேரா கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து உதவி போராசிரியர் வடிவேல், மீண்டும் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கடந்த 27ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். உதவிப் போராசிரியர் வடிவேலின் வருகைக்கு கண்டனம் தெரிவித்து, கடந்த 28ஆம் தேதி முதல் புவியியல் துறை மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி இன்று(ஜன.31) மூன்றாவது நாளாக மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது.
சாதிய வன்முறைகளைத் தூண்டும் வகையில் பேசிய உதவிப்பேராசிரியர் வடிவேலை கைது செய்ய வேண்டும் என்றும், அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க:பேனா நினைவுச் சின்னம்: கடலில் அமைத்தால் தூக்கி வீசிவிடுவோம் - சீமான் காட்டம்