புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த விஜயகாந்த்(33), கலையரசி(28) தம்பதியினருக்கு 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 9 வயதில் வெற்றிமாறன் என்ற மகன் உள்ளார். கலையரசி கடந்த எட்டு வருடங்களாகத் தீராத வயிற்று வலியால் துடித்துவந்தார்.
பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சைபெற்ற பின்னரும் அவருக்கு வயிற்றுவலி குணமாகவில்லை. ஏழ்மையில் உள்ள விஜயகாந்தால் தனது மனைவிக்குத் தொடர்ந்து மருத்துவம் பார்க்க முடியவில்லை. இதையடுத்து சமூகச் செயற்பாட்டாளர் உத்தமகுமரன் உதவியில், தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் ஆட்சியர் கோவிந்தராவ், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்குச் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தார்.
இன்று அந்தப் பெண்ணிற்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, அந்தப் பெண்ணின் வயிற்றில் ஒரு கட்டியும், அதைச் சுற்றி பஞ்சு போன்ற பொருள் இருப்பதும் தெரியவந்தது. இது தெரிந்து அதிர்ச்சியடைந்த விஜயகாந்த், 2011ஆம் ஆண்டு இதே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக தனது மனைவியை அனுமதித்தபோது, மருத்துவர்கள் அலட்சியமாக பஞ்சை வயிற்றுக்குள் வைத்து தைத்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனால், தனக்குக் கடுமையான மன உளைச்சல், பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளதால் உரிய இழப்பீடு வழங்கவும், சமபந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பு நடவடிக்கையாக இறைச்சிக்கடைகள் இடம் மாற்றம் !