கடந்த 2016ஆம் ஆண்டு புதுச்சேரியைச் சேர்ந்த மரிய தெரசா வனினா ஆனந்தி (37) தனது வீட்டில் 11 புராதன சிலைகளை பதுக்கி இருந்ததற்காக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவினை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்திருந்தன.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாக இருந்த ஆனந்தி நேற்று சென்னை திரும்பினார். இதையறிந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மரிய தெரசாவினை சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் இன்று கும்பகோணம் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாதவ ராமானுஜம் முன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த அவர் மரிய தெரசாவை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.