இது குறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் முருகன் கூறுகையில், "மூன்றெழுத்து திமுகவையும் ஊழலையும் பிரிக்க முடியாது. விவசாயிகளை பற்றிய கவலையும் இல்லை. இலங்கை தமிழர்கள் பற்றிய கவலையும் இல்லாமல் தங்களுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி பெற வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்கள்.
கடந்த 2016 தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டத்தை தேர்தல் அறிக்கையாக கொடுத்துவிட்டு தற்போது திமுக எதிர்க்கக்கூடிய வேலையில் ஈடுபட்டுள்ளது. வரக்கூடிய தேர்தலில் திமுக கடந்த தேர்தலை போல படுதோல்வி அடையும். தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பண்டிகைக்காக 2500 ரூபாய் அறிவிப்பு வெளியிட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகளையும், வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள்தான் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம். திமுக - காங்கிரஸ் கூட்டணி தான் உடையும் நிலையில் உள்ளது. மத்தியில் இனிமேல் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியாது. அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை இழந்து வருகிறது" என்றார்.