தஞ்சாவூர்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு (Hanuman Jayanti), கும்பகோணத்தில் உள்ள 9 உயரம் கொண்ட விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் சுவாமிக்கு 10,008 எலுமிச்சைப் பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனை ஏராளாமன பக்தர்கள் கண்டுகளித்தனர். அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம், புத்தி, கீர்த்தி, பலம், தைரியம், மனோ சக்தி ஆகியவற்றை அருள்பவர். வேண்டியவர்களுக்கு வேண்டியதை அருளும் வரப்பிரசாதி இவர் என்பதால் இவருக்கு பிராத்தனைகள் அதிகம் கிரக தோஷம் நீங்க இவருக்கு வடை மாலை சாற்றியும், கல்வியில் தடை, சுணக்கம் நீங்க வெற்றிலை மாலை சாற்றியும், பிரிந்த தம்பதியினர் சேர தேங்காய் மாலையும், தடைகள் நீங்கி உயர் பதவி அடைய துளசி மாலை சாற்றியும், தீராத நோய் தீர வெண்ணெய் காப்பு சாற்றியும், குழந்தை பேறு கிட்ட சந்தன காப்பும் சாற்றி வழிபடுவது முக்கிய பிராத்தனைகளாகும்.
இத்தகைய பெருமை கொண்ட ஆஞ்சநேயரை போற்றி வணங்கும் வகையில் கும்பகோணம் பாலக்கரை விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், தேவையான அளவிற்கு நல்லமழை பெய்து, நவதானியங்கள், காய்கனிகள் உள்ளிட்ட அனைத்து வகை வேளாண் பொருட்களும் அமோக விளைச்சல் காணவும், அனைத்து வகை தொழில்களும் மேன்மை பெறவும், உலக மக்கள் நலன் வேண்டியும் கடும் வெப்பம் தணிய வேண்டியும், உத்ராயண புண்ணிய கால தொடக்கமான தை மாத அமாவாசை தினமான இன்று (ஜன.21) சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமிக்கு, 10,008 எண்ணிக்கையிலான ராஜகனி (எ) எலுமிச்சம்பழங்கள் அலங்காரத்தில் அருள்பாலிக்க திரிசதி மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையும் 1,001 முறை ராமநாம ஜெபமும் கூற, சிறப்பு பூஜைகளுடன், குங்குமம் மற்றும் உதிரிப்பூக்களை கொண்டு அர்ச்சனைகள் செய்த பிறகு நட்சத்திர ஆர்த்தியுடன், 16 விதமான சோடஷ உபசாரமும் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இத்தலத்து ஆஞ்சநேய சுவாமியிடம் தங்களது வேண்டுதலை வெள்ளை தாளில் எழுதி அதனை மட்டை தேங்காயுடன் சிவப்பு நிறத்துணியில் கட்டி அமாவாசை நாள் பூஜையில் வைத்து பிராத்தனை செய்தால் எண்ணிய காரியம் மூன்று அமாவாசைக்குள் அதாவது, 90 நாட்களில் முழுமையான நிறைவேறும் என்பது அனுமன் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தை அமாவாசை: திருவண்ணாமலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்ட மக்கள்!