தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பெருவுடையார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள், மற்றும் பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து கோயிலின் கட்டடக் கலையை ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அம்மனுக்கு கொண்டாடப்படும் ஆடிப்பூரம் விழா நேற்று சில கோயில்களிலும், இன்று ஜூலை 22ஆம் தேதி சில கோயில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பெருவுடையார், ஸ்ரீ பெரியநாயகி அம்மன், ஸ்ரீ வாராஹி அம்மன், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகர், உள்ளிட்ட மூலவர் சுவாமிகளுக்கு திரவியப் பொடி, மஞ்சள், பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து ஆராதனையும் நடைபெற்றது.
உலக மக்கள் அமைதி பெற வேண்டியும், நீர்வளம், நிலவளம் பெருகி விவசாயம் செழிக்கவும், பஞ்ச பூதங்களும் இயற்கைச் சீற்றங்களில் இருந்து தனிய வேண்டியும், இந்த ஏகதின சிறப்பு அபிஷேக ஆராதனை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் தஞ்சாவூர் மேல வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொங்கணேஸ்வரர் கோயிலில் நேற்று (ஜூலை 21) வெள்ளிக்கிழமை இரவு ஆடிப் பூரத்தை முன்னிட்டு, கிழக்கு நோக்கிய அபூர்வமான துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.
உற்சவர் அம்மனுக்கு சிறப்பு வளையல்களான அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் தஞ்சாவூர் வடக்கு ராஜகோபாலசாமி கோயில் தெருவில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சியாமளாதேவி அம்மன் கோயில்களில் இன்று (ஜூலை 22) ஆடிப்பூரத்தை முன்னிட்டு, ஸ்ரீ சியாமளா தேவி அம்மனுக்கு வளையல்களான சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
இதேபோல், வடக்குவீதி ராஜ கோபால சுவாமி கோயிலில் நேற்று (ஜூலை 21) ஆடி முதல் வெள்ளிக்கிழமை பகுளாமுகி காளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சார்ந்த 88 திருக்கோவில்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு புகழ்பெற்ற பகுளாமுகி காளியம்மன் மற்றும் தஞ்சாவூரில் மிகவும் பிரசித்திபெற்ற உயரமான விஷ்ணு துர்க்கை அம்மன் மற்றும் சிவ துர்க்கை அம்மன் சந்நிதி அமைந்துள்ளது.
இதனையடுத்து ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பகுளாமுகி காளியம்மன், விஷ்ணு துர்க்கை, சிவதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: ஆடி வெள்ளி: பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரசுவாமி கோயிலில் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு!