தஞ்சாவூர்: திருப்பாற்கடலில் அமுதம் கடையும் போது அவதரித்த ஸ்ரீ மகாலட்சுமி எம்பெருமானை அடைய பிராத்தனை செய்ய, தான் அமிர்த விநியோகம் செய்ய மோகன அவதாரம் கொண்டுள்ளதால் பூலோகத்தில் சக்ரபடித்துறைக்கு தெற்கேயும், நாச்சியார்கோயில், ஒப்பிலியப்பன் கோயிலுக்கு மேற்கேயும் உள்ள செண்பகா ரண்யத்தில் தவம் செய்யும் படியும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் திருவாய் மலர்ந்தருளியது.
அதன்படி மகாலட்சுமி தாயாரும் திருநந்திபுர விண்ணகரம் எனப் போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள நாதன்கோவில் செண்பகமரத்தின் கீழ் எட்டு சுக்லபட்ச அஷ்டமி திதியில் தவம் செய்து, பெருமாளின் திருமார்பில் இடம் பெற்றார் என்கிறது விஷ்ணுபுராணம்.
நாங்குனேரி ஸ்ரீ வானமாமலை ஜீயர் சுவாமிகள் திருமட நிர்வாகத்திற்குட்பட்ட இச்சிறப்பு பெற்ற நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயிலில் மூலவர் சீனிவாசன், மேற்கு நோக்கி வைகுண்டத்தில் உள்ளது போன்று ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருடன் ஏக ஆசனத்தில் வீற்றிருந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
செண்பகவல்லி தாயார் கிழக்கு முகம் நோக்கி தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார். ஜெய விஜயர்களால் அதிகார நந்திக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் வழிபாடு செய்து சாப நிவர்த்தி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திருமங்கை ஆழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்ட தலம், 108 திவ்ய தேசங்களில் 21வது தலமும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் நடுநாயகமான தலமும் ஆகும்.
இது பிரம்மாவினால் பூஜிக்கப்பட்ட, மார்க்கண்டேயருக்கு காட்சியளித்த தலமாகும், குழந்தைபேறு இல்லாத தம்பதியர்கள் ஐப்பசி மாத சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பாயாசம் நிவதனம் செய்தால் குழந்தைபேறு கிட்டும் என்பதும் ஐதீகம். மேலும் மாதம்தோறும் வளர்பிறை அஷ்டமி திதியில் தாயார் சந்நிதியில் ஸ்ரீசுத்த ஹோமம் நடைபெறுவது வழக்கம்.
இத்தகைய பெருமைமிகு வைணவ தலத்தில் நேற்று ஆனி மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நாதஸ்வர மேள தாளம் முழங்க, மூலவர் ஜெகநாதப் பெருமாள், செண்பகவல்லி தாயார் ஆகியோருக்கு திரவியப்பொடி, மாப்பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், சந்தனம் முதலிய வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, கடங்களில் புனித நீர் நிரப்பி, பல்வகை முலிகை பொருட்கள் கொண்டு ஸ்ரீசுத்த ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. அதன் பூர்ணாஹதிக்கு பிறகு, கட அபிஷேகமும் நடைபெற்ற பின்னர், பெருமாள் தாயாருக்கு புது பட்டு வஸ்திரங்கள் மலர் மாலைகள் சாற்றி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க, சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்
இதையும் படிங்க: தஞ்சை திருச்சேறை சாராபரமேஸ்வரர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்