தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே ரம்யா நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி(70). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவருடைய ஏழு குழந்தைகளில் ஆறு பேருக்கு திருமணம் ஆகி தனித்தனியாக வசித்துவருகின்றனர். இவரது கடைசி மகன் பழனி(36). இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.
மருத்துவ விற்பனை பிரதிநிதயாக பணியாற்றிய இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த சாலை விபத்தில், மனநலம் பாதித்து சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகிறது.
தாயும், திருமணம் ஆகாத மகன் பழனியும் ஒரே வீட்டில் வசித்துவந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில், தாயுக்கும், மகன் பழனிக்கும் நேற்று முன்தினம்(செப். 14) இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பழனி தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இந்நிலையில், நேற்று(செப். 15) காலை நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது, சரஸ்வதி கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவம் இடம்வந்த பட்டீஸ்வரம் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், பழனியை கைது செய்தனர். தாயின் கழுத்தை அறுத்துக்கொலை செய்துவிட்டு தாயின் உடல் அருகே ரத்தத்துடன் விடிய விடிய பழனி அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து கொலைகளால் கடப்பாக்கத்தில் பதற்றம்