தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சித்த மருந்துகள் நல்ல பயனளிப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகள் கரோனா தடுப்பிற்காகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் கல்லூரி, வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து, தற்போது கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கல்லூரியில் 'சித்தா கோவுட் சென்டர்' (கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம்) தொடங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று உள்ளவர்கள் சித்தா மூலம் சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்பினால் அங்கு அனுமதிக்கப்படுவார்கள். தற்போது 50 படுக்கைகளுடன் இந்த மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு புற மருத்துவமாக வேது பிடித்தல், மஞ்சள் திரி புகை நுகர்தல், சுவையின்மை மற்றும் உணர்வின்மையைப் போக்கும் ஓமம் பொட்டனம் முகர்தல், உப்புத்தண்ணீர் வாய் கொப்பளித்தல் ஆகிய முறைப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் நுரையீரலைப் பலப்படுத்தும் வகையில் வர்மா புள்ளிகள் (சுயமாகச் செய்து கொள்ளும் முறை) மற்றும் யோகா பயிற்சிகள் அனைத்தும் கொடுக்கப்படும்.
உள்மருந்தாக நோயாளிகளின் குணங்களுக்கு ஏற்ப சித்த மருந்துகளான கபசுரக் குடிநீர் மற்றும் மூலிகை தேநீர் வழங்கப்படும். பொதுமக்கள் அனைவரும் மேற்படி சிகிச்சையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு!