தஞ்சாவூர் மாவட்டம் கூத்தஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன். இவரது மனைவி ராஜேஸ்வரி (65). முருகையன் மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு தஞ்சாவூர் மங்களபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வெள்ளைச்சாமி (37), மின் வாரியத்தில் பணியாற்றும் செந்தில்குமார் உள்பட 4 மகன்கள், மகள் உள்ளனர்.
இந்த நிலையில் குடும்ப பிரச்சனை தொடர்பாக மகன்கள் மீது தஞ்சை மாவட்ட எஸ்.பி ரவளிப்ரியா கந்தபுனேனியிடம், ராஜேஸ்வரி புகார் செய்தார். இந்த மனு வல்லம் டிஎஸ்.பி., அலுவலகம் மூலமாக தமிழ்ப் பல்கலைக்கழக போலீசாருக்கு அனுப்பப்பட்டது. இதன்பேரில் தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றும் மகேந்திரன் (52) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்வதற்கு வெள்ளைச்சாமியிடம், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத வெள்ளைச்சாமி தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி., ராஜூ, இன்ஸ்பெக்டர் பத்மாவதி உள்ளிட்டோர் தமிழ்ப் பல்கலைக்கழகக் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நேற்று மாலை மறைந்திருந்து கண்காணித்தனர்.
அப்போது, வெள்ளைச்சாமியிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகேந்திரனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ. 3,250 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு.. கோர விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு..