தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்துக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள் தடையை மீறி சிலை வைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூரில், சிவசேனா சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு விநாயகர் சிலையை வழங்க சென்ற அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் புலவஞ்சி போஸ் தலைமையிலான சிவசேனா கட்சி நிர்வாகிகளை, மதுக்கூர் காவல்துறையினர் மதுக்கூர் முக்கூட்டு சாலையில் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் புலவஞ்சி போஸ் கூறியதாவது," தமிழ்நாடு அரசு நாகூர் தர்காவில் சந்தனக்கூடு நடத்துவதற்கு சந்தன கட்டைகளை வழங்கி விழா நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல், தூத்துக்குடியில் மணி மாதா ஆலயத்தில் திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அவ்வரிசையில் மதுக்கடைகளில் மது விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ள தமிழ்நாடு அரசு, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும்" என்றார்.