தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை (69) உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடலை அதே பகுதியில் உள்ள செங்கமங்கலம் வலையான்குளம் இடுகாட்டிற்கு கொண்டு செல்லும் போது அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், செல்லத்துரையின் உறவினர்கள் புதுக்கோட்டை - பேராவூரணி பிரதான சாலையில் அவரின் உடலை சாலையில் வைத்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் புதுக்கோட்டை - பேராவூரணி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.