தஞ்சாவூர் மாவட்டம் சங்கிப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ‘ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி நடந்ததுபோல்தான் இந்தியாவில் மோடியும் அமித் ஷாவும் செயல்படுகிறார்கள். இந்தியாவில் நடப்பது ஹிட்லர் ஆட்சிதான்’ என்று குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் அதிமுக மேலவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்திருக்க வேண்டும். ஆனால் பாஜக கட்டுப்பாட்டில் அவர்கள் இருப்பதால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
வரும் 23ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தும் மாபெரும் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். பேரணியும் ஆர்ப்பாட்டத்தையும் காவல் துறையினர் தடுத்தால் அதனை மீறி செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு ஆளும் கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் கலவரங்களுக்கும் பாஜக அரசுதான் முழு பொறுப்பு’ என்றார்.
இதையும் படிங்க: 'ஒரே கட்சி ஒரு நபர் ஆட்சி' மத்திய அரசு மூர்க்கத்தனம்!