தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 48 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. இதில் 9 நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி குடிநீரைச் சுத்திகரிப்பதாக அலுவலர்கள் தெரிவித்து வந்தனர்.
தற்போது தமிழ்நாடு முழுவதும் விதிமுறைகளை மீறி செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தஞ்சை கோட்டத்தில் செயல்பட்டுவரும் 13 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைக்க அலுவலர்கள் முடிவு செய்தனர்.
இன்று மதியம் தஞ்சாவூர் சீனிவாச பிள்ளை ரோட்டில் செயல்பட்டுவரும் தனியார் நிறுவன மினரல் வாட்டர் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு நிலத்தடி நீர் பிரிவு செயற்பொறியாளர்கள் வசந்தி, வரதராஜன் ஆகியோர் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.
பின்னர், கும்பகோணம் கோட்டத்தில் 11 நிறுவனங்களுக்கும், பட்டுக்கோட்டை கோட்டத்தில் 15 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. இன்று ஒரே நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 39 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது!