தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை அணுகி, குறைந்த வட்டியில் நேரடியாக கடன் பெற்றுத்தருவதாக கூறி நூதன முறையில் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறி சபரி பைனான்ஸ் என்ற பெயரில் அடிக்கப்பட்ட விளம்பர நோட்டீஸை வழங்கும் அந்த கும்பல் நாங்கள் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருகிறோம் என ஆசை வார்த்தை கூறி மகளிர் சுய உதவிக் குழுக்களின் விபரங்களைப் பெறுகின்றனர்.
20 ஆயிரம் ரூபாய் கடன் பெற, மாத தவணை, ரூ.750, 30 மாதங்கள் செலுத்த வேண்டும் என்றும், 4 லட்சம் ரூபாய் கடன் பெற, மாதத் தவணை 1500 ரூபாய், 30 மாதங்கள் செலுத்தவேண்டும் இதற்காக புதிதாக குழு அமைக்க வேண்டியதில்லை. ஏற்கனவே இருக்கும் குழு பெயரில் நேரடியாக கடன் பெற்றுத் தருகிறோம் எனக் கூறி, மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் விவரம் பெறுகின்றனர்.
தொடர்ந்து, குழு உறுப்பினர்கள் மற்ற இடங்களில் வாங்கியுள்ள கடன்களுக்கு உள்ள "ஓடி"யைச் சரி செய்ய வேண்டும், அதற்காக ரூ.500 முதல் ரூ. 2,500வரை செலுத்த வேண்டும் என தனியார் வங்கி கணக்கு ஒன்றைச் சொல்லி அதில் பணம் செலுத்தச் சொல்கின்றனர்.
அவர்களை நம்பி பணம் செலுத்திய மகளிர் சுய உதவிக் குழுவினர், அதற்குப் பிறகு அந்த கும்பலைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவர்கள் வழங்கிய துண்டு விளம்பர நோட்டீஸில் உள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டால், யாரும் போனை எடுப்பதில்லை எனவும் தெரிவிக்கின்றனர். இதேபோல பல இடங்களில் அந்த கும்பல் மோசடி செய்துள்ளதாகவும், தகுந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து ஏமாற்றுபவர்களை உடனடியாக கைது செய்து தாங்கள் இழந்த பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: நீதிமன்றத்தில் கைவரிசை காட்டிய திருடன்