தஞ்சாவூர்: பிரபல கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் கிரிக்கிங்டம் கிரிக்கெட் பயிற்சியகத்தின் புதிய கிளையின் பயிற்சி களம் கும்பகோணத்தில் இன்று(ஆக.27) திறக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 3வது கிளையான இதை பாராளமன்ற மேலவை உறுப்பினர் எஸ் கல்யாணசுந்தரம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் துணை மேயர் ஆகியோர் பேட்டிங் செய்து கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி வைத்தனர். பிரபல கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் பயிற்சி மையமான கிரிக்கிங்டம் சார்பில் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும், இந்திய அளவில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது சென்னை மற்றும் வேலூருக்கு அடுத்ததாக தற்போது 3வது கிளையை கும்பகோணத்தில் அமைத்துள்ளனர்.
இதனை ரோகித் சர்மாவின் இளைய சகோதரும், கிரிக்கிங்டம் செயல் தலைவருமான விஷால் சர்மா மற்றும் துணை தலைவர் பராக் தஹிவால் ஆகியோரது முன்னிலையில், பாராளுமன்ற மேலவை உறுப்பினர் எஸ் கல்யாணசுந்தரம், கும்பகோணம் அல் அமீன் மெட்ரிக் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இதற்காக பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் பயிற்சி களத்தினை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் செ இராமலிங்கம், கும்பகோணம் சட்டபேரவை உறுப்பினர் சாக்கோட்டை க அன்பழகன், துணை மேயர் சு.ப தமிழழகன் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் காளிதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.