தஞ்சாவூர்: கலாசார ரீதியாக வளமான அறிவு சார்ந்த இந்திய பாரம்பரிய பொருட்களை கண்டறிந்து மீட்க, மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அறிவியல் பாரம்பரிய ஆய்வுமுன் முயற்சி திட்டம்(ஸ்ரீ திட்டம்) மூலம் முனைந்து வருகிறது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய நெல் ரகங்களை மீட்பதில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாரம்பரிய நெல் வகைகள் அறிவியல் பூர்வமாக ஆவணப்படுத்தி வைக்கப்படவில்லை; விதைகளையும் முறையாக சேமித்து வைக்கவில்லை என்பதாலும் இந்த இரண்டையும் மீட்டெடுக்க தஞ்சையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் வேதியியல் மற்றும் உயிரி தொழில் நுட்பத்துறை முனைவர்கள் சித்ரா மற்றும் கருணாநிதி ஆகியோர் முயற்சிகளைத் தொடங்கினர். இந்த விதைகள் குறித்து பேராசிரியை சித்ரா கடந்த 15 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி ஆய்வறிக்கை சமர்ப்பித்தார்.
இந்த ஆய்வோடு மத்திய அரசின் ஸ்ரீ திட்டமும் இவர்களது முயற்சிக்கு உதவியது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 400 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்துள்ளன. இந்த முயற்சிகளின்போது நூறு ரகங்களை இவர்களால் அறிய முடிந்தது. இந்த நெல் விதைகள் வைத்துள்ளவர்களை கண்டறிந்து அவர்களிடம் இருந்து நெல் விதைகளின் 20 ரகங்களை கொண்டு தஞ்சையை அடுத்த குருவாடிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளின் வயல்களில் பயன்படுத்தி ஆராயப்பட்டது.
இந்தப் பரிசோதனையில் பாரம்பரிய நெல் வகைகள் சிறப்பான விளைச்சலைக் கொடுத்துள்ளன என கண்டறிந்தனர். இதை மற்ற விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பெறும் வகையில் பேராசிரியை சித்ரா மற்றும் பேராசிரியர் கருணாநிதி ஆகியோர் ஸ்ரீ திட்டம் மூலம் முயற்சி எடுத்து வருகின்றனர். பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கை உரங்கள் மூலம் நன்கு விளைச்சலை கொடுக்கின்றன.
மகசூல் அதிகம், செலவு குறைவு, பாரம்பரிய நெல் வகைகள் மருத்துவத்தன்மை ஊட்டச்சத்து பண்புகளை கொண்டிருப்பவை, கரும்குறுவை சித்த மருத்துவத்திற்கு பயன்படுத்தக் கூடியது ஆகும். கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்றவற்றில் சர்க்கரை உயர்வு குறியீட்டு எண் ஜிஐ குறைவாக உள்ளது. இதேபோல் பல்வேறு நெல் ரகங்களுக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன.
இந்த நெல் ரகங்களின் விதைகளைப் பெருக்க விதை வங்கி ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு ஸ்ரீ திட்டம் மூலம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் முறையில் பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிட வைத்து அவர்களைக்கொண்டு 10 சமுதாய விதை வங்கியும் தொடங்கப்பட்டது.
இந்த விதை வங்கி மூலம் பாரம்பரிய நெல் விதைகளை தாங்களும் பயிரிட்டு, மற்ற விவசாயிகளுக்கும் விதைகளை வழங்குகின்றனர். பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஸ்ரீ திட்டத்துடன் இணைந்து பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் இணைந்து பணியாற்றுவது பாராட்டத்தக்க வகையில் உள்ளது என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:மேகமலையில் இருப்பது சுற்றுலா விடுதியா?குடியிருப்பா?: ஆய்வு செய்ய உத்தரவு