தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பருவம் தவறிய மழையால் நெல்லில் 30 விழுக்காடு மகசூல் குறைந்துள்ளதாகவும், எனவே தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் நெல்லில் 17 விழுக்காடு ஈரப்பதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்று, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அலுவலர்கள் வற்புறுத்துவதாகப் புகார் கூறிய விவசாயிகள், எந்தவித நிபந்தனையின்றி நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும் எனக் கூறி அழுகிய நெற்பயிற்களுடன் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு அப்பகுதி விவசாயிகளின் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி மனு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு