தஞ்சாவூர்: டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்க ஒப்பந்தத்துக்கு அனுமதியை ரத்து செய்ய வைத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி மற்றும் பாராட்டு விழாக்கூட்டம் தமிழ்நாடு விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச்சங்கம் சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசும் போது, “டெல்டாகாரன் எனச் சிலர் கூறிக் கொள்கிறார்கள், அதற்கு தகுதி வேண்டும். உண்மையான டெல்டாக்காரன் யார் என்றால் நம்மாழ்வார், எம்.எஸ்.சுவாமிநாதன், உ.வே.சா, சிவாஜி கணேசன் ஆகியோர் தான். இவர்கள் தான் விவசாயிகளுக்குத் துணை நின்றவர்கள்.
இதையும் படிங்க: அண்ணாமலை பேட்டி கொடுத்து பெரிய ஆளாக நினைக்கிறார் - EPS-ன் முழு பேட்டி!
1960ம் ஆண்டு தமிழகத்தில் பாசன கால்வாய்கள் மூலம் சாகுபடி நிலப்பரப்பு 11 சதவீதமாக இருந்து 2023 ல் 3.4 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது கால்வாய் மூலம் 9 லட்சம் ஹெக்டேரிலிருந்து 6 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. அதே போல் நீர்த்தேக்கமான குளம், ஏரி மூலம் பாசன பரப்பு 9.41 லட்சம் ஹெக்டேரிலிருந்து 3.69 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
1960ல் 61 லட்சம் ஹெக்டேராக இருந்த பாசன பரப்பு கடந்த 63 ஆண்டுகளில் 45 லட்சம் ஹெக்டேராக மாறி, 16 லட்சம் ஹெக்டேர் பாசன பரப்பு குறைந்துள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா? அதே போல் இந்தியாவில் பிறமாநிலங்களை விட தமிழகத்தில் விவசாயிகளின் சராசரி ஆண்டு வருமானம் குறைவாகவே உள்ளது. இதை உயர்த்த இந்த திராவிட மாடல் ஆட்சியில் முயற்சிகள் ஏதும் செய்யவில்லை. தமிழகத்தில் டாஸ்மாக் சாராயத்தின் விற்பனையை உயர்த்த எடுக்கும் முயற்சியை கூட விவசாயத்துக்கு இந்த தமிழக அரசு முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை. இதனை விவசாயிகள் உணர வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக அண்ணாமலைக்கு கட்சி நிர்வாகி பூண்டி வெங்கடேசன் இயற்கை விவசாய நெல்லை வழங்கினார், பின்னர் பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. விவசாயி ஒருவர் தாமரை பூவால் கட்டப்பட்ட மாலையை அண்ணாமலைக்கு அணிவித்தார், அதை அவர் அந்த விவசாயிக்கே அணிவித்து அண்ணாமலை மகிழ்ச்சி தெரிவித்தார்.
இவ்விழாவில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், மாவட்ட தலைவர் ஜெய் சதிஷ் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.