உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் ஆலயம் என்ற பெரிய கோயிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று விழா எடுக்கப்படும். அந்தவகையில், இந்த ஆண்டிற்கான விழா இன்று காலை தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து மங்கள இசை திருமுறை அரங்கம் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, சதய விழாக்குழுத் தலைவர் துரை திருஞானம், தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தஞ்சை பெரிய கோயிலின் வெளியே அமைக்கப்பட்டுள்ள மாமன்னர் ராஜராஜ சோழனின் சிலைக்கு அரசு சார்பில் நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. சதய விழாவையொட்டி நாளை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.