தஞ்சாவூர்: காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், கர்நாடக அரசை கண்டித்து வரும் 11ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 8 மாவட்டங்களில் முழு கடையடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக ஜுன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனையடுத்து இந்தாண்டு வழக்கத்தை விட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடியை விவசாயிகள் செய்தனர். இந்நிலையில் காவிரியில் கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல், நேரடி நெல் விதைப்பு மற்றும் இயந்திர நடவு பயிர்கள் என சுமார் 3 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டது.
இந்நிலையில், எஞ்சிய குறுவை பயிரை பாதுகாத்திடவும், வரும் சம்பா சாகுபடி பணிகளை துவக்கிடவும், தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடகா அரசு வழங்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் இரண்டு முறை பந்த் போராட்டத்தை அங்குள்ள விவசாய அமைப்புகள் நடத்தியுள்ளன.
இந்நிலையில், காவிரியில் மாதம் வாரியாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் 11-ஆம் தேதி அன்று முழு கடைஅடைப்பு மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற உள்ளது என காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் திமுக விவசாய அணி செயலாளரும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏகேஎஸ் விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க நிர்வாகிகள் மாசிலாமணி, சாமி.நடராஜன், தமிழக விவசாயிகள் கூட்டியக்கம் தெய்வசிகாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்ணன், செந்தில், திமுக எம்எல்ஏ சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க கர்நாடகாவிற்கு காவிரி ஆணையம் உத்தரவிட வலியுறுத்தியும், தமிழக அரசு பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்திய பின்பும் பாராமுகமாக செயல்படும் பிஜேபி அரசை கண்டித்தும் நடைபெறும் முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் முழு வெற்றியடைய அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், அனைத்து விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.