தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த இளம்பெண் அபர்ணா(21)(பெயர் மாற்றப்பட்டுள்ளது), தன்னை காதலித்து, 9 மாத கர்ப்பமாக்கிவிட்டு, தற்போது திருமணம் செய்ய மறுக்கும் பரத் (18)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரைக் கண்டித்து மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த கர்ப்பிணியுடன் அவரது குடும்பத்தினரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்தவர் அபர்ணா(21)(பெயர் மாற்றப்பட்டுள்ளது), அதே பகுதியைச்சேர்ந்த பரத்(18)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இருவரும் கும்பகோணத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும்போது காதல் வயப்பட்டு பின்னர் இருவரும் இரு வீட்டாருக்கும்தெரியாமல், திருப்பூரில் வேலைக்குச்சென்று, அங்கு கணவன் - மனைவியாக குடும்பம் நடத்தியதாகத்தெரிகிறது.
இதில், தற்போது அபர்ணா(21)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து அபர்ணாவின் பெற்றோர், பரத்தின் குடும்பத்தாரிடம் அபர்ணாவைத் திருமணம் செய்து கொள்ள கேட்டபோது, அவர்கள் மறுத்து விட்டதாகத் தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்ய மறுப்பதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அபர்ணாவின் குடும்பத்தினர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரத்துடன் திருமணம் செய்து வைக்கக்கோரி புகார் அளித்திருந்தனர்.
இதுகுறித்து இருதரப்பினரிடமும் காவல் துறையினர் பேசி வந்த நிலையில், அபர்ணா மற்றும் அவரது பெற்றோர் தரப்பினர் இன்று(ஆக.5) அனைத்து மகளிர் காவல் துறையினர் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை எனக் கூறி, மகளிர் காவல் நிலையம் முன்பு பிளக்ஸ் பேனருடன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் அவர்களிடம் விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்துப்பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: கும்பகோணத்தில் ரூ.3 கோடியே 62 லட்சத்திற்கு ஏலம்போன 3,250 குவிண்டால் பருத்தி!