தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரக்கலக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது பொது ஆவுடையார்கோயில். இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது.
இந்தக் கோயிலின் சிறப்பம்சம் என்னவென்றால், கார்த்திகை மாதங்களில் திங்கள்கிழமைகளில் மட்டுமே இரவு 12 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, 3 மணிக்கு மூடப்படும். மற்ற நாள்களில் கோயில் திறக்கப்படமாட்டாது.
அதேபோல வருடத்தில் ஒரே ஒருமுறை தை மாதம் முதல் தேதியான, பொங்கலன்று மட்டுமே பகலில் திறக்கப்படும். நேற்று (ஜன.15) பொங்கல் பண்டிகை என்பதால் காலை 5 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
5 மணி முதலே பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று காத்திருந்தனர். பக்தர்கள் கூட்டம் பல்லாயிரக்கணக்கில் இருந்ததால் அவர்கள் பல மணி நேரங்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்யவேண்டியிருந்தது. நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட தானியங்கள், ஆடு, கோழி ஆகிவற்றை ஏலம் எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
நேற்று முன்தினம் அதிகாலைமுதல் நேற்று இரவு 12 மணிவரை பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் தாமதமாக கோயில் மூடப்பட்டது. புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ஜனவரி 20இல் தென் சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம்