தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கள்ளப்புலியூர், மணஞ்சேரி பகுதியில் சிலர் சட்ட விரோதமாகக் கைத்துப்பாக்கி வைத்துக் கொண்டு பலரை மிரட்டி வருவதாக, திட்டமிட்ட குற்றத் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், குற்றத் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின், திருச்சி மண்டல துணை காவல் கண்காணிப்பாளர் டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில், 10 பேர் கொண்ட தனிப்படையினர், கடந்த 6-ஆம் தேதி, கள்ளப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணஞ்சேரி மற்றும் கள்ளப்புலியூர் கிராமங்களில் தீவிரமாகச் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தென்றல் (35) என்பவரை போலீசார் கைது செய்து, அவர் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தும் குண்டுகளையும் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக, போலீசார் கள்ளபுலியூர் மற்றும் மணஞ்சேரி பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில், அப்பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் மறைத்து வைத்திருந்த இரு கைத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
கள்ளப்புலியூர் பகுதியில், கடந்த இரு நாட்களில், அடுத்தடுத்து சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த 3 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைத்துப்பாக்கி எப்படி இவர்களுக்கு வந்தது? துப்பாக்கியை வைத்து இதுவரை யார் யாரை மிரட்டியுள்ளனர்? இது யாருக்குச் சொந்தமானது? யாரையாவது கொலை செய்யத் திட்டுமிட்டு கைத்துப்பாக்கியைப் பதுக்கி வைத்திருந்தனரா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தென்றல் மற்றும் ஈஸ்வரனின் நெருங்கிய கூட்டாளியும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபருமான, கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் வேலு, மணி ஆகியோரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முருகனை போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவரின் ஆலோசனைப் படி, ஐசியூ பிரிவில் அனுமதித்துள்ளனர்.
இதனால், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, கும்பகோணம் டி.எஸ்.பி கீர்த்திவாசன் தலைமையில், கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கும்பகோணம் அருகே அடுத்தடுத்து, சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்ட 3 கள்ள கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராணிப்பேட்டை அருகே ஒரு வயது மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய் தற்கொலை.. நடந்தது என்ன?