கரோனா தொற்று பரவலை தடுக்க தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் அண்ணாசாலையில் சரக்கு வாகனம் ஒன்று வந்தது.
அதை நிறுத்திய போக்குவரத்து காவலர், ஓட்டுநரிடம் வாகனத்தின் ஆவணத்தை கேட்டுள்ளார். ஆனால் வாகனத்தின் ஆவணங்கள் முறையாக இல்லாததால் போக்குவரத்து காவலர் அபராதம் விதித்துள்ளார்.
உடனே ஓட்டுநர் தஞ்சாவூர் நகர திமுக நிர்வாகிக்கு போன் செய்து தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவர், போக்குவரத்து காவல்துறையினரை மிரட்டி வாகனத்தை விடுவிக்குமாறு கூறியுள்ளார்.
அங்கு பணியிலிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர், "வாகனத்தை விடுவிக்க சிபாரிசு செய்ய நேரில் வந்தீர்கள். எங்கள் தெருவில் சரியாக தண்ணீர் வரவில்லை. அதை சரிசெய்து கொடுங்கள்" என கூறியுள்ளார்.
இதைக்கேட்ட திமுக நிர்வாகி, பதில் ஏதும் கூறமால் அங்கிருந்து கிளம்பினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.