தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக கும்பகோணம் மாநகரில், சாரங்கபாணி கோயில் தேரடியில், நேற்று (அக்.19) காவல் உதவி மையத்தை தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி வரை இம்மையத்தில் தொடர்ந்து சுழற்சி முறையில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பணியில் ஈடுபடுவதொடு, மாநகரில் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் கொண்டும், 3 கண்காணிப்பு கோபுரங்கள் வழியாகவும், குற்றச்செயல்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், பொது மக்களுக்கு வசதியாக, அவர்களுக்கு தகவல் அளிக்கும் வகையில் 35 இடங்களில் ஒலிபெருக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், கும்பகோணம் மாநகரில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றச் சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்தை சீர்செய்யவும், பொதுமக்களின் குறைகளை உடனடியாக கண்டறிந்து உதவிடவும் மாநகரில் இக்காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
24 மணிநேரமும் உதவிக்காக அணுகலாம்: இக்காவல் உதவி மையம் வரும் தீபாவளி பண்டிகை வரை, தொடர்ந்து 24 மணி நேரமும், கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கவும், தேவைக்கு ஏற்ப அறிவிப்புகள் வழங்க ஏதுவாக மாநகர் முழுவதும் ஒலிபெருக்கிகள் அறிவிப்புகள் வழங்கவும் பொதுமக்கள் தங்களது தேவைக்காக எந்நேரமும் உதவிக்காக இந்த மையத்தை அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 தினங்களே உள்ளதால் நாளுக்கு நாள் நகரின் முக்கிய வீதிகளில் குறிப்பாக ஹாஜியார் தெரு, ஆயிகுளம் சாலை உட்பட ஜவுளி கடைகள், நகைகடைகள், தெருவோரக்கடைகள் நிறைந்துள்ளதால் நாள் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
இதனால், இவ்வழித்தடத்தில் நான்கு சக்கர வாகன போக்குவரத்திற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலுக்கு ஏற்ப முக்கிய வீதிகளில் இருசக்கர வாகன போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துணை காவல் கண்காணிப்பாளர்கள் கும்பகோணம் அசோகன், திருவிடைமருதூர் (பொ) பாலாஜி ஆகியோர் முன்னிலையில், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் சரக காவல் ஆய்வாளர்கள், கும்பகோணம் கிழக்கு அழகேசன், மேற்கு பேபி, தாலுக்கா ரமேஷ், சுவாமிமலை சிவ செந்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம் நாகலட்சுமி, திருவிடைமருதூர் ராஜேஷ் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: தீபாவளியையொட்டி சிறப்பு பாரம்பரிய உணவு கண்காட்சி!