தஞ்சை மாநகராட்சியில் கரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், கடைகள், அலுவலகங்கள், வங்கிகள் தனியார் நிறுவனங்களில் கை கழுவுவதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் மாநகராட்சி சார்பில் பேட்டரி வாகனம் மூலம் இது குறித்து நாள்தோறும் அறிவிப்புகளை மக்களுக்கு புரியும் விதத்தில் கூறி வருகின்றனர். இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது முதல் முறையாக ரூ. 100, இரண்டாவது முறையாக ரூ. 500, மூன்றாவது முறையாக ரூ. 1000வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்ற 1987 நபர்களிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.