தமிழர்களின் அடையாளமாகக் கருதப்படும் பனை மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து, அழிவின் விளிம்பிலிருந்து வருவதாக சூழலியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏரி, குளங்களின் கரையோரங்கள், வயல்வெளிகளின் வரப்புகளில் பனைமரங்கள் இருக்கும். இவற்றின் வேர்கள் மழை நீரை உறிஞ்சி சேமிக்கும் வசதி உடையவை. மேலும் மண் அரிப்பையும் தடுக்கும் தன்மை உடையவை.
தற்போது பனை மரம் சார்ந்த தொழில்களும் நசிந்து போயின. இதனால் பனைமரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. இருப்பினும் பனை மரத்தைப் பற்றி பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அகில இந்திய மக்கள் சேவை விவசாய பிரிவு மாநில தலைவரும், பனை விதைப்புக்குழுவும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் 5 கோடி பனை விதைகளை விதைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டன. இதற்காக பனை விதைப்பு ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் 500 பனை மரங்களை உற்பத்தி செய்யும் நோக்கில் பனை விதை விதைப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று(அக்-17) வாளமர்கோட்டை கயிலாபுரி ஏரிக்கரையில் பனை மற்றும் உயிர் மரங்கள் நடும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் இணைந்து 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்தனர். மேலும் அரசமரம், ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு மரப்போத்துக்கள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதையும் படிங்க: மருத்துவக் குணம் மிகுந்த ஜாதிக்காய் ஊறுகாய்: களைகட்டும் விற்பனை