தஞ்சாவூர்: புத்தி, கீர்த்தி, பலம், தைரியம், மனோ சக்தி ஆகியவற்றை அருள்பவராக கருதப்படும் அனுமனுக்கு கிரக தோஷம் நீங்க வடை மாலை சாற்றியும், கல்வியில் தடை, சுனக்கம் நீங்க வெற்றிலை மாலை சாற்றியும், பிரிந்த தம்பதியினர் சேர தேங்காய் மாலையும், தடைகள் நீங்கி உயர் பதவி அடைய துளசி மாலை சாற்றியும், தீராத நோய் தீர வெண்ணெய் காப்பு சாற்றியும், குழந்தை பேறு கிடைக்க சந்தன காப்பு சாற்றியும் வழிபடுவது முக்கிய பிராத்தனைகளாக உள்ளன.
அந்த வகையில் கும்பகோணம் பாலக்கரை விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமிக்கு அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகவும், தேவையான அளவிற்கு நல்ல மழை பெய்து, நவதானியங்கள், காய்கனிகள் உள்ளிட்ட அனைத்து வகை வேளாண் பொருட்களும் அமோக விளைச்சல் காணவும், அனைத்து வகை தொழில்களும் மேன்மை பெறவும், உலக மக்கள் நலன் வேண்டியும் கடும் வெப்பம் தணிய வேண்டியும், மாசி மாத அமாவாசை தினமான நேற்று (பிப்.20) 10 ஆயிரத்து 8 எண்ணிக்கையிலான பூவன், ரஜதாளி, பேயன், செவ்வாழை, தேன்கதளி, கற்பூரவள்ளி உள்ளிட்ட வாழைப்பழங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து திரிசதி மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையும், 1,001 முறை ராம நாமமும் கூற, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து குங்குமம் மற்றும் உதிரிப்பூக்களை கொண்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. பின்னர் பஞ்சார்தி செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இந்த கோயிலில் உள்ள ஆஞ்சநேய சுவாமியிடம் தங்களது வேண்டுதலை வெள்ளை தாளில் எழுதி, அதனை மட்டை தேங்காயுடன் சிவப்பு நிறத்துணியில் கட்டி, அமாவாசை பூஜையில் வைத்து பிராத்தனை மேற்கொண்டால் எண்ணிய காரியம் மூன்று அமாவாசை காலங்களுக்குள், அதாவது 90 நாட்களில் முழுமையாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: Maha shivaratri: சிவ ஆலயங்களில் மகா சிவராத்திரி விழா.. அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!