தஞ்சை அருகே பள்ளி அக்ரஹாரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் மாட்டுவண்டி வைத்து தொழில் செய்துவருகிறார். சம்பவத்தன்று இவருடைய காளை மாடு ஒன்று வீட்டின் அருகில் உள்ள மந்திரி என்பவரின் வயலில் பயிர்களை மேய்ந்துள்ளது.
இதை அறிந்த வயல் உரிமையாளரின் உறவினர் காமராஜ் என்பவர், இரக்கம், மனிதாபிமானம் துளி கூட இல்லாமல் காளை மாட்டின் காலை அரிவாளால் வெட்டியிருக்கிறார். இதனால் மாட்டில் கால் எலும்பு முறிந்து பாதி துண்டானது. எழுந்து நடக்க முடியாத நிலையில், வயலில் அப்படியே மாடு சாய்ந்து கிடந்தது.
அக்கம் பக்கத்தினர் வயல்வெளியில் மாடு கால் எலும்பு துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக மாட்டின் உரிமையாளர் ஆனந்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, கதறி அழுதப்படி பதற்றத்துடன் சம்பவ இடத்திற்கு சென்று காளை மாட்டை பார்த்த ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவரிடம் காட்டினார். அப்போது, மாட்டைப் பரிசோதித்த மருத்துவர் கால் எலும்பு பலமாக சேதமடைந்துவிட்டதால் இனி சரி செய்வது கடினம் என கூறியுள்ளார்.
தற்போது மாடு எழுந்து நடக்க முடியாத நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. இது குறித்து ஆனந்த் நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
வயலில் மாடு மேய்ந்ததற்காக, மாட்டின் காலை பாதி துண்டாக வெட்டிய வயலின் உரிமையாளரை மிருகவதை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.