தஞ்சாவூர்: கும்பகோணத்தை அடுத்துள்ள திருப்பனந்தாள் மற்றும் திருவிடைமருதூர் ஒன்றிய பகுதிகளில், பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க கும்பகோணத்திற்கு வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கும்பகோணத்தில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அறிவாலய கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், “கும்பகோணத்தில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அறிவாலயம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பின்னர், கலைஞர் சிலை நிறுவப்பட்ட உள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இசைவு தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ப்ளூடூத் போன்ற உபகரணங்களைக் கொண்டு தேர்வு எழுதி வெற்றி பெறுவது தொடர் கதையாக உள்ளது. தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் வட இந்தியர்கள் குறிப்பாக, இந்தி பேசுபவர்கள் இது போல் முறைகேடுகளில் ஈடுபட்டு வேலைகளில் சேருகின்றனர்.
இதனை மத்திய அரசு கண்டும் காணாமல் இருந்து வருகிறது. தமிழ்நாடு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் போன்ற தேர்வுகளில் இதுபோல் முறைகேடு இல்லாமல் தேர்வுகள் நேர்மையாக நடைபெறுவது எங்களுக்கு பெருமிதம்” என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது அரசு தலைமை கொறடா கோவி செழியன், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: சேலத்தில் லியோ பட காட்சிகளுக்கு கட்டுப்பாடு - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!