தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே நெம்மேலி கிராமத்திலுள்ள உண்ணாமுலை தாயார் உடனுறை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கடைசியில், உலக நன்மைக்காக பசு மாடுகளுக்கு சிறப்பு கோ பூஜைகள் செய்வது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு உலக நன்மைக்காகவும், நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெறவும், கரோனா பாதிப்பிலிருந்து பொது மக்கள் விடுபட வேண்டும் எனவும் கொல்லிமலை சித்தர் தலைமையில் சிறப்பு யாகசாலை நடத்தப்பட்டு, கிராம மக்களால் கொண்டுவரப்பட்ட 108 பசு மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோ பூஜைத் திருவிழா நடைபெற்றது.
இந்தக் கோ பூஜைத் திருவிழாவில் பசு மாடுகளுக்கு கோயில் நிர்வாகத்தினர் குங்குமமிட்டு. மாலையிட்டு மரியாதை செய்தனர். பின்னர், மாட்டின் உரிமையாளர்கள் மலர்கள் தூவியும் கற்பூரம் ஏற்றியும் சிறப்பு ஆராதனை செய்து வழிபட்டனர். இதில் நெம்மேலி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.