தஞ்சாவூர்: மத்திய அரசு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை வருடந்தோறும் நடத்தி வருகிறது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை தமிழ்நாட்டில் நடத்தி வருகின்றனர். மேலும் நீட் தேர்வு அச்சத்தால் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர்.
இதனால், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றி கவர்னருக்கும், குடியரசு தலைவருக்கும் அனுப்பி உள்ளது. மேலும் திமுக கட்சி, ஆட்சி அமைப்பதற்கு முன்பு தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தஞ்சை மாநகரம் முழுவதும் கருப்பு, சிகப்பு வண்ணத்தில் ‘நீட் விலக்கு - நம் இலக்கு’ என்ற வாசகத்துடன், தஞ்சை மாநகரின் முக்கிய வீதிகளில் கடந்த இரண்டு நாட்களாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. மேலும், அந்த போஸ்டரில் நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்திற்கு உங்கள் ஆதரவை பதிவு செய்ய, அதில் இருக்கும் QR கோடு-ஐ ஸ்கேன் செய்யவும் என அச்சிட்டு, ஸ்கேன் லோகோவுடன் போஸ்டர்கள் இருந்தன.
ஆனால், இந்த போஸ்டர்களை யார் ஒட்டியது, எந்த கட்சியினர் ஒட்டியுள்ளனர் என்பது குறித்து போஸ்டரில் எதுவும் இடம் பெறவில்லை. இந்நிலையில், இன்று (நவ.03) அந்த போஸ்டர்களில் நீட் என்ற வார்த்தைக்கு பதிலாக, மேலே கருப்பு ஸ்டிக்கரில் மது என்ற வார்த்தை உள்ள ஸ்டிக்கரை மர்ம நபர்கள் ஒட்டியுள்ளனர்.
இதனால் நீட்டுக்கு பதிலாக மது என்ற வார்த்தை மாறி, ‘மது விலக்கு - நம் இலக்கு’ என்ற வகையில், அந்த போஸ்டர்கள் தஞ்சை மாநகரம் முழுவதும் காட்சியளிக்கின்றன. தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும், இயக்கங்களும் கோரிக்கைகளை வைக்கின்றனர். தற்போது ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர், நீட் விலக்கிலிருந்து மதுவிலக்காக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசால் நடத்தப்படக்கூடிய டாஸ்மாக் மதுபானக் கடையால், நாளுக்கு நாள் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி, வன்முறைக்கு ஆளாகின்றனர். மேலும் கொலை, கொள்ளை ஆகிய குற்ற சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். உச்சகட்டமாக, மதுவினால் உடல் பாதிக்கப்பட்டு தங்களது உயிரையும் இழந்து விடுகின்றனர்.
ஆகவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் போராடி வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைப்போம் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், நீட் விலக்கிற்காக ஒட்டப்பட்ட போஸ்டர் மதுவிலக்காக மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சசிகலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர உரிமை உள்ளதா? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி