தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள நடுவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி சரண்ராஜ் (30). இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று (ஆக.21) இரவு சரண்ராஜ் திருபுவனத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் ஏற முயன்றுள்ளார்.
அப்பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சரண்ராஜை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சரண்ராஜ் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த திருவிடைமருதூர் காவல் துறையினர், சரண்ராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், "காங்கேயம் பேட்டையைச் சேர்ந்த சிலருக்கும், சரண்ராஜுக்கும் முன்பகை இருந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது" என தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவுடி சரண்ராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவிடைமருதூர், திருபுவனம் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!