தஞ்சாவூர்: சோழபுரம் பகுதியில் நாட்டு வைத்தியர் வீட்டில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில், அவரது உடலை தேடும் பணியின் போது மேலும் சில எலும்புக்கூடுகள் கிடைத்ததாகவும், போலீஸ் தரப்பில் இருந்து அங்கு என்ன நடந்தது என தெளிவான விளக்கம் அளிக்கப்படாததால் பொதுமக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கும்பகோணம் அருகே மணல்மேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் அசோக்குமார் (வயது 27). ஓட்டுநர் வேலை பார்த்து வந்த இவர் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்துள்ளார். நவம்பர் 13ஆம் தேதி நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சிதம்பரம் செல்வதாக பாட்டியிடம் கூறிச் சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
அசோக்குமாரின் செல்போனுக்கு பாட்டி தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி கேமிரா கட்சிப் பதிவுகளை ஆய்வு செய்த போது அவர் சோழபுரம் வீதியில் சென்றது தெரியவந்தது.
அந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு அப்பகுதியில் அசோக்குமாருக்கு நெருக்கமான கேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கேசவமூர்த்தி இளைஞர் அசோக்குமாரை கொலை செய்து அவரது வீட்டின் அருகில் புதைத்து வைத்ததை ஒப்புக்கொண்டு உள்ளார்.
இதனை அடுத்து அசோக்குமாரின் உடலைத் தோண்டி எடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அசோக்குமாரின் உடல் தனியாகவும், தலை தனியாகவும் புதைக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும், அசோக்குமாரின் உடல் விரைவில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போக வேண்டும் என தோலை உரித்து புதைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும், அசோக்குமாரின் உடலைத் தேடிய போது மற்றொரு மண்டை ஓடும் கிடைத்து உள்ளது. அது 2021ஆம் ஆண்டு காணாமல் போன கேசவமூர்த்தியின் நண்பர் அனாஸ் உடையதாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், கேசவமூர்த்தி தன்பாலின ஈர்ப்புடையவர் என்றும், அந்த விவகாரத்தில் அசோக்குமார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
கேசவமூர்த்தி முன்பு கொத்தனார் வேலை பார்த்து வந்தவர் என்றும், தற்போது நாட்டு வைத்தியராக செயல்பட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும், கேசவமூர்தியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது ஏராளமான கேப்சூல் மாத்திரைகளும், டைரியும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அந்த டைரியில் நூற்றுக்கு மேற்பட்டவர்களின் பெயர்கள் இருந்ததால் அவர்களில் யாரையேனும் கேசவமூர்த்தி கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கேசவமூர்த்தி வீட்டைச் சுற்றி உள்ள பகுதியில் இன்று (நவ. 24) காலை பத்து மணி முதல் ஒரு ஜேசிபி மற்றும் 25க்கும் மேற்பட்ட கூலி ஆட்களை வைத்து வேறு ஏதேனும் உடல்கள் அல்லது தடயங்கள் இருக்கிறதா என போலீசார் சோதனை நடத்தினர்.
மாலை 3 மணிவரை நடைபெற்ற சோதனையில் மேலும் பல எலும்பு துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகாராஜபுரத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் கூறுகையில், "சோழபுரம் பகுதியில் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு என்ன நடக்கிறது என உறவினர்களுக்கு கூட போலீசார் தெரிவிக்கவில்லை. மேலும் செய்தியாளர்களுக்கும் தெரிவிக்கவில்லை. செய்தியாளர்களுக்கு தெரிவித்தால், செய்தியைப் பார்த்தாவது அங்கு என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்வோம். கேசவமூர்த்தியின் வீட்டில் என்ன மர்மம் நடந்தது எனத் தெரியாததால் அப்பகுதியில் வாடகைக்கு குடியிருக்கும் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு வேறு இடங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. அப்பகுதியில் குடியிருக்கும் மக்களும் பீதியடைந்துள்ளனர்" எனத் தெரிவித்து உள்ளார்.