தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் கோயில் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. அதனால் இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்து கோவிலின் கட்டிட மற்றும் சிற்பக் கலையை ரசித்தும், சாமியையும் தரிசனம் செய்தும் செல்கின்றனர்.
இந்த நிலையில், ஆண்டுதோறும் தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நவராத்திரி திருவிழா கடந்த 15 ஆம் தேதி கோலகலமாகத் தொடங்கியது. நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில், ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாக சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, உற்சவ அம்மனுக்கு விஜயதசமி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு, குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் தஞ்சையில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற கோயில்களான, ரேணுகாதேவி என்கிற எல்லையம்மன் கோயிலில் உள்ள ராஜமாதங்கி என்கிற சரஸ்வதி அம்மனுக்கு ராணி தர்பார் அலங்காரம் செய்யப்பட்டது.
மேலவீதி அருள்மிகு கொங்கணேஸ்வரர் திருக்கோயிலில் துர்காம்பிகைக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. அதேபோல் கள்ளபெரம்பூர் கைலாசநாதர் உடனுறை பிரகன்நாயகி அம்பிகை சந்தனக்காப்பு அலங்காரத்தில் அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதைப்போல் நாலுகால் மண்டபம் ஸ்ரீசியாமளாதேவி அம்மன் கோயிலில் அம்மனுக்கு ராணி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு தினமும் பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
அதில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம், மீனாட்சி அலங்காரம், சதஸ் அலங்காரம், காயத்ரி அலங்காரம், அன்னபூரணி அலங்காரம், கெஜலட்சுமி அலங்காரம், சரஸ்வதி அலங்காரம், ராஜராஜேஸ்வரி அலங்காரம், மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் என 9 நாட்கள் நடைபெற்று விஜயதசமி அலங்காரத்துடன் நவராத்திரி விழா வெகுவிமர்சையாக நிறைவு பெற்றது.
இந்த நவராத்திரியை முன்னிட்டு தினமும் கலை நிகழ்ச்சியாக தேவார திருமுறை இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், குச்சிப்புடி நடனம், பக்தி பாடல்கள், வீணை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, மும்பை ஆகிய மாநிலங்களில் இருந்து பரதநாட்டிய கலைஞர்கள் வந்திருந்து, நாட்டிய நிகழ்ச்சியை நடத்தி சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: ராஜராஜ சோழன் சதய விழாவும் அவரை துரத்தும் சாதிய சாயமும்!..