தஞ்சாவூர்: கும்பகோணம் ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ண சுவாமி திருக்கோயிலில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மகோற்சவத்தை முன்னிட்டு, விழாவின் 7ஆம் நாளில் உற்சவர் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணனுக்கு திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் பாட்ராச்சாரியார் தெருவில் அமைந்துள்ள பழமையான ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி திருக்கோயில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், தஞ்சை நாயக்கர் மன்னர்கள் ஆட்சி காலத்திலும் செப்பு சிலா சாசனப்படி ஆதிக்கம் பெற்ற பெருமை கொண்ட வைணவ ஸ்தலம் எனக் கூறப்படுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெறும். 11 நாட்கள் நடைபெறும் விழாவில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருவீதியுலாவுடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டும் இவ்விழா, கடந்த மாதம் (ஆகஸ்ட் 30) தேதி புதன்கிழமை நவகலச திருமஞ்சனத்துடன் தொடங்கியது.
இதையும் படிங்க: Krishna Jayanthi : கண்ணன் வந்தான்.. என்ன சொன்னான்? கிருஷ்ணர் அருளிய அன்பு உரை!
இந்திர விமானம், சந்திர பிரபை, சேஷ வாகனம், தங்க கருட வாகனம், ஹனுமந்த வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து 7வது நாளான நேற்று (செப். 5) உற்சவர் ஸ்ரீ கிருஷ்ணர், ருக்மணி சத்யபாமா சமேராய் விசேஷ பட்டுடுத்தி, சிறப்பு மலர் அலங்காரத்துடன் எழுந்தருளினார்.
பின்னர், மாலை மாற்றும் வைபவமும், அதனையடுத்து ஊஞ்சலில் வைத்து நலுங்கு வைபவமும், நடைபெற்றது. பின், திருக்கோயில் முன்பு அமைக்கப்பட்ட விசேஷ பந்தலில் சுவாமிகள் எழுந்தருளினர். அங்கு பட்டாட்சாரியார்கள் விசேஷ ஹோமம் வளர்த்து, சுவாமிக்கு கங்கனம் கட்டி, புதிய பட்டு வஸ்திரங்கள் அணிவித்து, சுவாமிகளின் பிரவரம் கூறி, நாதஸ்வர மேள தாளம் முழங்க, மாங்கல்ய தாரணம் நடைபெற்றது.
மகா தீபாராதனை செய்து ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ணன் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஸ்ரீ ஜெயந்தி விழாவில், முக்கிய நிகழ்வாக இன்று செப்டம்பர் 6ஆம் தேதி புதன்கிழமை காலை வெண்ணைதாழி உற்சவமும், நாளை செப்டம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை மாலை திருத்தேரும், வரும் செப்டம்பர் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு உறியடி உற்சவமும் நடைபெற்ற உள்ளது.
தொடர்ந்து, 9ஆம் தேதி சனிக்கிழமை இரவு விடையாற்றி உற்சவத்துடன் இத்திருக்கோயிலில், 51ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெயந்தி விழா நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட்டியலின பெண் சமைப்பதால் காலை உணவு திட்டம் புறக்கணிப்பா? அரசுப் பள்ளியில் கொடூரம்! சாட்டையை சுழற்றிய மாவட்ட ஆட்சியர்! நடந்தது என்ன?