தஞ்சாவூர் அருகே பூதலூரில் உள்ள நரிக்குறவர் காலனியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசு தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றன. இவர்கள் சிறு தொழிலாக பாசிமணி, பொம்மைகள், பேன்சி ஸ்டோர், பொருட்களை கோயில் திருவிழாக்களில் விற்பனை செய்வது போன்ற தொழில்களை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு 1995ஆம் ஆண்டில் 18 புதிய தொகுப்பு வீடுகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. இங்கு குடும்பத்துடன் சுமார் 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், வீட்டின் மேல் உள்ள கான்கிரீட் கூரைகள் பழுதடைந்து அதிலுள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும்படி உள்ளது.
இதனால் மழை நாட்களில் கட்டடம் முழுமையாக இடிந்து விழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் சுற்று சுவர்கள், ஜன்னல்கள், தரை தளம் ஆகியவை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. அரசு தொகுப்பு வீடு கட்டுவதற்கு அனுமதி அளித்தாலும் பொருளாதார சூழ்நிலையால் எங்களால் வீடு கட்ட இயலவில்லை என்றும் அரசே முன் வந்து கட்டித்தர வேண்டும் என்றும் கூறுகின்றனர்
மேலும், அடிப்படையான வசதிகளான கழிப்பிடம், சாக்கடை வசதி இல்லை என்றும், குடிநீர் சரியாக எங்களுக்கு கிடைப்பதில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். எங்களுக்கு போர்க்கால அடிப்படையில் வீடு கட்டி தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.