தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக போட்டியிடுகிறது. அங்கு பூண்டி வெங்கடேசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு வாக்குச் சேகரிக்க பூதலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, "புராதன சிறப்புமிக்க தஞ்சை ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் எனத் தொடங்கி இன்று பிரகதீஸ்வரர் கோயில் வரை பல சிறப்புகளைப் பெற்றுள்ளது. சுவாமிமலை முருகன் திருவிழா பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு மக்கள் வெகுவாகக் காத்திருக்கின்றனர்.
தமிழ் மொழி பழமையான மொழி; மூத்த மொழி; அதனுடைய இலக்கியம் உலகிற்கே வழிகாட்டியாக உள்ளது. இந்தியாவின் ஆன்மிகத்திற்கு தமிழர்கள் கொடுத்த வரம் அதிகம். திமுக-காங்கிரஸ் போல வழிவழியாக உள்ள வாரிசு குடும்ப அரசியலை ஒழித்து, மிகப்பெரிய வெற்றிபெற வேண்டும்.
2ஜி, 3ஜி, 4ஜி என்பது திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சியின் ஊழல்கள். DMK-வில் உள்ள D என்றால் Dynasty (குடும்ப ஆட்சி), M என்றால் Money (பணம்), K என்றால் Katta Panchayat (கட்டப்பஞ்சாயத்து), ஒரு குடும்பம் பணம் பறிக்க கட்டப்பஞ்சாயத்து நடத்துவதே DMK என்று பொருள்.
காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவை தாரைவார்த்ததினால் 238 பேர் சிங்களப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் தற்போது இலங்கைத் தமிழர்கள் ஒருவர்கூட நமது ஆட்சியில் பாதிக்கப்படாத வண்ணம் பார்த்துக் கொண்டுள்ளோம்.
தமிழ்நாட்டிற்கு இந்தாண்டு இரண்டு லட்சம் கோடி உதவி செய்துள்ளோம். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராகவும், ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் உள்ளனர்.
சென்னை, கோவை, திருச்சி, சேலம் என சிறப்பு சீர்மிகு நகரம் உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மேலும் சென்னை மெட்ரோ ரயிலுக்குப் பல ஆயிரம் கோடி ஒதுக்கி பணிகள் நடந்துவருகின்றன.
தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி மருத்துவமனை கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்குத் தேவையான அனைத்துப் பணிகளும் ஒத்துழைப்புடன் செய்யப்பட்டுவருவது மகிழ்ச்சிகரமானது.
தமிழ்நாட்டின் உள்ளூர் பொருள்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்பொருட்டு தஞ்சை தலையாட்டி பொம்மை, தஞ்சை பெயிண்டிங், செயற்கை கல் தயாரிக்கும் ஆலை, சென்னை பட்டு எனப் பல தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதிமுக கட்சி மாநிலக் கட்சி என்றாலும், தேசிய உணர்வோடு, தேசிய பண்பாட்டுடன் நடக்கும் இந்தக் கட்சி பாரதிய ஜனதாவுடன் இணைந்து செயல்படுகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 72 நாடுகளுக்கு இந்தியா உதவிவருகிறது. ஏழ்மையை ஒழிக்க அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. 12 லட்சம் பஞ்சமி நிலம் பறிமுதல்செய்யப்பட்டு உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் நீர்வளத் துறை மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் நல்ல குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீனவர்களுக்கு மீன்பிடித் தொழில் மேம்படுத்த அனைத்துப் பணிகளும் செய்து தரப்படும்" என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ரத்தினசாமி, ஒன்றியச் செயலாளர்கள் உள்பட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.