தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பந்தநல்லூர் வேட்டமங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்தவர், இளங்கோவன்.பட்டியல் இனத்தைச் சார்ந்தவர். இவரது மகன் பிரபாகரன் (22). ஆட்டோ ஓட்டுநராக இருந்திருக்கிறார்.
காமாட்சிபுரம் பகுதியைச்சேர்ந்தவர், மணிகண்டன். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்தவர். இவரது மகள் பந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
பிரபாகரன் மற்றும் மணிகண்டனின் மகள் ஆகியோர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மாணவியைக் காதலித்த இளைஞர் கொலை
நேற்று (அக்.10) இரவு காமாட்சிபுரம் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த பிரபாகரனுக்கும் மணிகண்டனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
அப்போது மணிகண்டன் வைத்திருந்த கத்தியால் பிரபாகரனைக் குத்தினார். அப்போது அருகில் இருந்த பிரபாகரனின் சகோதரர் விக்னேஷ் (20) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.
அங்கு வந்த உறவினர்கள் பிரபாகரனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்க முற்பட்டபோது உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பந்தநல்லூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பிரபாகரனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, அவரது தம்பி விக்னேஷ் என்பவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேலும் மாணவியின் தந்தை மணிகண்டனை காவல் துறையினர், கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மூதாட்டியை நூதன முறையில் திசை திருப்பி 10 சவரன் நகைகள் கொள்ளை