தஞ்சாவூர், மேல அலங்கம், கோட்டை தெருவைச் சேர்ந்த ராஜா - புவனேஸ்வரி தம்பதியின் இரட்டைக் குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்றன. ஒரு குழந்தை வீட்டின் அருகில் உள்ள கோட்டை அகழியில் இறந்துகிடந்தது. இது குறித்து தஞ்சாவூர் மேற்கு காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதிகளில் சுற்றித்திரிந்த 20 குரங்குகளை வனத் துறையினர் கூண்டுகளை வைத்துப் பிடித்தனர். அவற்றை பச்சமலை காட்டுப்பகுதியில் விடவுள்ளதாக வனத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
வனத் துறை சந்தேகம்
இதனிடையே, குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், குரங்குகள் துாக்கிச் செல்ல வாய்ப்பில்லை; வேறு ஏதோ சம்பவம் நடந்துள்ளது என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட வனத் துறை அலுவலர் இளையராஜா கூறியதாவது:
நம் பகுதியில் உள்ள குரங்கு குட்டிகளின் எடை 200 முதல் 500 கிராம்தான் இருக்கும். தூக்கிச் சென்றதாகக் கூறப்படும் குழந்தைகளின் எடை 2.5 கிலோ இருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில், குரங்குகள் ஓட்டின் வழியாக இறங்கி 3 அடி உயரமுள்ள சுவர் வழியாக ஏறிச் செல்ல வாய்ப்பு இல்லை.
பரிசோதனையில், குரங்குகள்தான் குழந்தையைத் தூக்கிச் சென்றது என்றால் குழந்தைகளின் உடலில் சிறு காயங்கள்கூட இல்லை என்பதை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இறந்த குழந்தையின் உடற்கூராய்வு அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம்; தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு