தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் ஆகியவை இணைந்து 56வது தேசிய நூலக வார விழா, மகிழ்ச்சி திருவிழாவாக மாவட்ட மைய நூலகத்தில் நேற்று (நவ.17) நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, பள்ளி மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த திருக்குறள் விளக்கக் கண்காட்சியினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, கண்காட்சியை பார்வையிட்டு, திருக்குறள் குறித்து சிறப்பாக விளக்கம் அளித்த மாணவ மாணவிகளை அமைச்சர் பாராட்டினார்.
அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது, “ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் உணவு இடைவேளையின்போது 20 நிமிடங்கள் பள்ளியில் உள்ள நூலகத்திற்குச் சென்று மாணவர்கள் படிக்க வேண்டும். அங்குள்ள புத்தகத்தை அவர்கள் படித்து, அந்த புத்தகத்தின் மூலமாக அவர்கள் உள்வாங்கியுள்ள கருத்துகளை கட்டுரைகளாகவோ, ஓவியமாகவோ வெளிப்படுத்தலாம்.
அது தொடர்பாக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அறிவுரையின்படி செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். புத்தகம் படிப்பது என்பது ஒரு கலை. அதில் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். புத்தகத்தை வாங்கி, ஒவ்வொரு பக்கமாக திருப்பி திருப்பி படிக்கும்போதுதான் நினைவாற்றல் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
அப்படி புத்தகத்தைப் புரட்டிப் புரட்டி படிக்கும்போது, ஏதாவது ஒரு பக்கத்தில் இருக்கின்ற இரண்டு வரிகள்தான் மிகப்பெரிய மாற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். அந்த வகையில், வாசிப்பு இயக்கத்தை பள்ளி மாணவர்களுக்கு கொண்டு செல்லக் கூடிய பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறோம்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசு கொறடா கோவி.செழியன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாநகர மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட நூலக அலுவலர் முத்து உள்பட பள்ளி மாணவர்கள், வாசகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கடந்த 15ஆம் தேதி சிந்தனை அரங்கமும் மற்றும் 17ஆம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு கவியரங்கமும் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிகளில் பேச்சாளர்கள், கவிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதயும் படிங்க: திருவண்ணாமலை விவசாயிகள் 6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து.. ஒருவர் மீது தொடரும் வழக்கு.. முதலமைச்சரின் விளக்கம் என்ன?