தஞ்சாவூர் மேட்டூர் அணையில் 90 அடிக்கு மேல் தண்ணீர் உள்ள நிலையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால், தண்ணீர் திறப்பதற்குள் கடைமடை பகுதி வரை செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் டெல்டா மாவட்டத்தில் தூர்வாரக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தஞ்சை அருகே கூடலூர் வெண்ணாற்றில் பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை தூர் வாரும் பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பிரதீப் யாதவ், "தஞ்சை மாவட்டத்தில் 20.5 கோடி ரூபாயில் ஆயிரத்து 169 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணிகள் தொடங்கி இரண்டு நாள்கள் ஆகின்றன. ஜூன் 15ஆம் தேதிக்குள் தூர்வாரும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கடைமடை வரை தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது"எனத் தெரிவித்தார்.