காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டத்தின் அளவும் படிப்படியாக அதிகரித்துவருகிறது.
வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒன்பதாயிரத்து 900 கனஅடியாக இருந்த நீர்மட்டம் இன்று வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையிலிருந்து குறைந்தளவு நீர் மட்டும் வெளியேற்றப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 81 நாட்களுக்கு பிறகு 50 அடியை தாண்டி உள்ளது.
இந்நிலையில், இன்று கே.ஆர்.எஸ். அணையிலிருந்து ஆறாயிரம் கனஅடியும், கபினி அணையிலிருந்து ஆயிரம் கனஅடி தண்ணீரும் கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. ஆயினும், திறந்துவிடப்பட்ட தண்ணீர் தற்பொழுதுதான் மேட்டூர் அணையையே எட்டியுள்ளது.
அதுமட்டுமின்றி, அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்படுவதாலும், கர்நாடகத்திலிருந்து தாமதமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும் ஆடிப்பெருக்கிற்காக காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட்டாலுமே தண்ணீர் அப்பகுதியை அடைய தாமதமாகும். இதனால், ஆடிப்பெருக்கிற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது கேள்விக்குறியே!