திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரட்சி சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர், வெங்கடாசலம் (50). இவர், திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவில் வசித்து வருகிறார். நேற்று மதியம் (மே.10) 2 மணிக்கு பணி முடித்து, வீட்டிற்குத் தனது, இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, ராமர் மடத்தெருவைச் சேர்ந்த பாமக நகரச்செயலாளர் கவிபிரியன் என்பவர், வெங்கடாசலத்தை விரட்டி வந்து, கத்தியால் கையில், வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
காயமடைந்த வெங்கடாசலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆய்வாளர் வெங்கடாசலம் திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் தடையை மீறி, மீன் கடை நடத்தியவர்களை அப்புறப்படுத்தியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த மீன் வியாபாரியும் பாமக நகரச்செயலாளருமான கவிபிரியன் வெங்கடாசலத்தை அரிவாளால் வெட்டியது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலத்தை தாக்கியவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், வெங்கடாசலத்தை அரிவாளால் வெட்டிய கவிபிரியனை காவல் துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சுகாதாரத் துறை அலுவலரை கத்தியால் வெட்டிய பாமக பிரமுகருக்கு போலீஸ் வலை!