தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில் ஊழல் முறைகேடுகள் நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் ஊழலைக் கண்டித்தும், அதனை கண்டிக்காத மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பூதலூர் வட்டார வளர்ச்சி நிர்வாகத்தை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில் அவர்கள் "100 நாள் வேலை திட்டப்பணிகளில் உயிரிழந்த நபர்கள், வெளி ஊர்களில் உள்ள நபர்கள் ஆகியோரின் பெயரில் வேலை போலியான ஆவணங்கள் தயார் செய்து அவர்கள் பெயரில் பணம் எடுத்து கொள்ளை அடிக்கும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பூதலூர் ஒன்றியத்தில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டப்பணிகளில் சட்டக் கூலியான ரூ.256 முழுமையாக வழங்க வேண்டும். அதனை கரோனா பேரிடர் காலத்தில் வேலை நாள்களை 200ஆக உயர்த்தவேண்டும்" உள்ளிட்டக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மு.அ.பாரதி, கும்பகோணம் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆர்.ஆர். முகில், டி.கண்ணகி, ஒன்றிய துணை செயலாளர்கள் கே.செந்தில்குமார், எம்.துரைராஜ், ஒன்றிய பொருளாளர் கே.துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர் சு.லதா சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு: நடவடிக்கையால் மக்கள் நலப்பணியாளர் செய்த காரியம்...!