தஞ்சாவூர் அருகே வெண்ணலோடை கிராமத்தில் சம்பா சாகுபடிக்காக காவிரி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் விரைந்து கடைமடைப் பகுதி வரை செல்வதற்கு ஏதுவாக சிறப்பு தூர்வாரும் பணி நடைபெறுகிறது. அம்மாவட்டத்தில் மட்டும் 114 இடங்களில், 789 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.24 கோடியில் நடைபெற்றுவருகிறது. ஆய்வின்போது, ட்ரோன் கேமராவை பயன்படுத்தி தூர்வாரும் பணிகளை அம்மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பார்வையிட்டார்.
இந்தப் பணிகள் மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. வெண்ணலோடை கிராமத்தில் ரூ.30 லட்சம் செலவில் வெண்ணாற்றின் நடுவே இருந்த மணல் திட்டுகள் அகற்றப்பட்டு, தண்ணீர் சீறாக செல்ல கரை பலப்படுத்தப்பட்டுவருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும், வெண்ணாற்றில் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு தூர்வாரும் பணிக்காக இதர மாவட்டங்களிலிருந்து 95 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பிற மாவட்ட பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மேற்பார்வையில் பணிகள் துரிதப்படுத்தப்படுகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் 26ஆம் முடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஆய்வின்போது சிறப்புக் கண்காணிப்பு அலுவலர் ராஜகோபால்சுங்காரா, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.