மதுரை:தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கட்டை ராஜா. இவர் பிரபல ரவுடி ஆவார். பட்டீஸ்வரம், கும்பகோணம் உள்ளிட்டப் பல பகுதிகளில் கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களை கட்டை ராஜா செய்துள்ளார். கட்டைராஜா மீது 14 கொலை வழக்குகள் உள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டு செந்தில்நாதன் என்பவரை கொலை செய்த கட்டை ராஜா தலைமறைவானார். போலீசார் தொடர்ந்து அவரைத் தேடி வந்தனர்.
போலீஸ் தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்ட கட்டை ராஜா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கும்பகோணம் விரைவு நீதிமன்றம் ரவுடி கட்டை ராஜாவிற்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ரவுடி கட்டை ராஜாவின் மாமா ஆறுமுகத்திற்கும், தம்பி செல்வத்திற்கும் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து கட்டை ராஜா மற்றும் அவரது உறவினர் ஆறுமுகம், செல்வம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கும்பகோணம், பட்டீஸ்வரம் காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:இரவு நேரத்தில் விசாரணை கைதிகளை விசாரிக்கக் கூடாது: டிஜிபி சுற்றறிக்கை