கும்பகோணம் நகரில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான மாசிமகப் பெருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மாசிமக தீர்த்தவாரி இன்று (பிப்ரவரி 17) நடைபெறுகிறது.
இதனையொட்டி இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நீராடிவருகின்றனர். மாசி மாதம் மக நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி தினத்தன்று மாசிமக விழா கொண்டாடப்படுகிறது.
கும்பகோணம் நகரில் உள்ள முக்கிய சிவாலயங்களான ஆதிகும்பேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காசி விசுவநாதர், காளகஸ்தீஸ்வரர், கௌதமேஸ்வரர் ஆகிய கோயில்களில் பத்து நாள் திருவிழாவாகவும், ஏனைய சிவாலயங்களில் ஒருநாள் திருவிழாவாகவும் மாசிமக விழா கொண்டாடப்பட்டது.
தற்போது மகாமகத் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. அப்போது பல்வேறு சிவாலயங்களிலிருந்து 5 பெரும் கடவுளர் மகாமக குளக்கரையில் காட்சி அளித்தனர்.
அப்போது அஸ்திர தேவர்கள் அனைவரும் மகாமக குளத்தில் மஞ்சள் சந்தனம் பால் உள்ளிட்ட 19 வகையான திரவிய பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அஸ்திர தேவர்கள் அனைவரும் மகாமக குளத்தில் புனித நீராடப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் கும்பகோணம் மகாமக குளத்தில் புனித நீராடிவருகின்றனர்.
குளத்தின் பாதுகாப்புப் பணியில் தீயணைப்புப் படை வீரர்களும், கரைப் பகுதியில் காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்: ஒரே வாரம் ஒரு கோடி!