தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் பகுதியில் பெருமாள் கோயில் அஜக்ரஹாரத்தை சேர்ந்தர்கள் கோவிந்தராஜ்(82), லட்சுமி (76) தம்பதி. திருமணம் ஆகாத 52 வயது மதிக்கத்தக்க மகன் ராஜேந்திரனுடன் தம்பதி வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தம்பதியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் முன் கட்டில் போட்டு ராஜேந்திரன் அமர்ந்து இருப்பதை பார்த்து சந்தேகித்துள்ளனர்.
கும்பகோணம் டி.எஸ்.பி. அசோகன் தலைமையிலான போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு வெட்டப்பட்ட நிலையில் உடல் அழுகியவாறு கோவிந்தராஜ், லட்சுமி தம்பதியின் சடலங்கள் கிடந்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் வயதான தம்பதி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர். போலீசார் கூறியதாவது, கோவிந்தராஜ் மற்றும் லட்சுமி தம்பதி மூத்த மகன் ராஜேந்திரனுடன் வசித்து வந்துள்ளனர். இதில் மனநலம் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன், தனது தாய் மற்றும் தந்தையை படுகொலை செய்தது தெரியவந்ததாக போலீசார் கூறினர்.
மேலும் அந்த வீட்டில் இருந்து படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ராஜேந்திரனிடம் நடத்திய விசாரணையில், கடந்த சனிக்கிழமை(நவம்பர் 26) இரவே தம்பதியை படுகொலை செய்தது தெரியவந்ததாக போலீசார் கூறினர்.கோவிந்தராஜ் - லட்சுமி தம்பதி சாப்பிட்டு கொண்டு இருந்த போது கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சடலத்தின் துர்நாற்றம் வீசும் வரை ராஜேந்திரன் தனக்கு தானே சமைத்து சாப்பிடதாகவும், கைது செய்யப்பட்ட அன்று காலையும் சாப்பாடு தயார் செய்திருந்த நிலையில் ராஜேந்திரனை கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையை அடுத்து தம்பதியின் சடலங்கள் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு, உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. கைது செய்த ராஜேந்திரனை கும்பகோணம் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள கும்பகோணம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.
வழக்கு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி, ராஜேந்திரனை வரும் டிசம்பர் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ராஜேந்திரன் திருச்சி மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார். ஒரே வீட்டில் வசித்த பெற்றோரை, மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் கும்பகோணம் தில்லையம்பூர் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சென்னை - கோவை, சேலம் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!